சென்னையில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீரில், 45% பாதுகாப்பற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆரம்ப கட்டத்தில் தேவையான குடிநீர் குழாய்கள் அல்லது வண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டதை தான் அனைவரும் வாங்கி குடித்து வந்தனர். ஆனால், தேவை அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் கேன் தண்ணீர் பயன்பாடும் அதிகரித்துள்ளது. சுமார் 1 கோடி பேருக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள சென்னை மாநகராட்சிக்கு, நாள் ஒன்றிற்கு சுமார் 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், அதில் சுமார் 10 சதவிதம் மட்டும் நேரடியாக நிலத்தடி நீர் மூலம் மக்களுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள தேவையை பூர்த்தி செய்வதில் கேன் தண்ணீர் பெரும் பங்காற்றி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் விற்கப்படக்கூடிய தண்ணீர் கேன்கள், பாட்டில்கள் மற்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட 187 மாதிரிகளை சென்னை மாநகராட்சி ஆய்வுக்காக அனுப்பி உள்ளது.
தர ஆய்வின் முடிவில் 187 மாதிரிகளில் 40 மாதிரிகள் குடிப்பதற்கு தரமற்ற தண்ணீர் என்பது தெரிந்துள்ளது. மேலும், எஞ்சியுள்ள 147 குடிநீர் மாதிரிகளில் முப்பதில் பாக்டீரியா வைரஸ் பரவல் இருப்பதும், 20 மாதிரிகளில் போலியான நிறுவனங்களின் பெயர் சீலுடன் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற தரமற்ற நீரை குடிப்பதால் காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் நேரிடும் என மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், விலை கொடுத்து தண்ணீரை வாங்கக் கூடிய மக்கள் இலவசமாக நோய்களை வாங்கி வருகின்றனர்.

அதேசமயம் இலவசமாக கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம் கூட விலை கொடுத்து மருந்துகள் வாங்க வேண்டிய அளவுக்கு நோய்கள் வராது எனவும் தெரிவிக்கின்றனர். எனவே சென்னையில் விற்கக்கூடிய கேன் தண்ணீரில் 40% குடிப்பதற்கு தரமற்றவை என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.




