தமிழகத்தில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில், முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர் மட்டக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
முதல்வரின் தலைமையில் இதுவரை, 2 உயர்மட்டக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, 34 தொழில் திட்டங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 23 ஆயிரம் நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
26 திட்டங்களுக்கு அனுமதி :
தமிழ்நாட்டில் வணிகம் புரிதல் எளிதாக்குதலை மேலும் மேம்படுத்துவதற்காக, பச்சை நிற வகை தொழிற்சாலைகள் நேரடியாக இயக்குவதற்கான இசைவு வழங்குதல் மற்றும் திட்டம் சாராத பகுதிகளில், நிலப் பயன்பாட்டின் வகைப்பாடு மாற்றம் செய்வதை ஒற்றைச் சாளர முறையில் சேர்த்து வணிக எளிதாக்குதல் விதிகளின் கீழ் கருதப்பட்ட ஒப்புதல் அளிக்கும் வகையில் கொள்கைச் சீர்திருத்தம் செய்ய உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது.இதன் தொடர்ச்சியாக, முதல்வரின் தலைமையில் இன்று நடைபெற்ற மூன்றாவது கூட்டத்தில், பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அனுமதிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் 25 ஆயிரத்து 213 கோடி ரூபாய் அளவுக்கான தொழில் முதலீடுகள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்து, சுமார் 49 ஆயிரத்து 3 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை விரைவாக உருவாக்குவது உறுதியாகி உள்ளது.
இத்திட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




