தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அனுமதிக்கப்படாது என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திட்டவட்டமான அறிவிப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுக்களும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு, தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் பாராட்டுக்களும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் புதிய கல்விக் கொள்கை அறிவித்துள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று இன்று (3.8.2020) திட்டவட்டமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். மேலும், இறுதிவரை உறுதியான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகவே இருக்கவேண்டும். இதோடு மட்டுமல்ல, சமூகநீதி, இட ஒதுக்கீடு, பெண் கல்வி போன்றவற்றில் எதுவும் கூறாத கல்விக் கொள்கை, பல நுழைவுத் தேர்வுகள் – இவைபற்றியும் தமிழக அரசு தனது உறுதியான கருத்தையும், நிலைப்பாட்டினையும் அறிவித்தலும் அவசியம்! என்றும், மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்ற இந்த முடிவை உடனடியாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நமது மகிழ்ச்சி கலந்த நன்றி! நன்றி!! எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது! என்றும், மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்! என்றும் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ச.ம.க., தலைவர் சரத்குமார் தெரிவித்ததாவது, மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்காது எனவும், தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.மேலும், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தொடர்ந்து, தமிழக மக்களுக்கு ஆதரவு தர வேண்டும் என தான் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.