புதுச்சேரி: கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனாவைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மூலம் ஹோட்டல் நிர்வாக ஊழியர்கள், வங்கிப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் எனப் பல்வேறு பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடத்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்ட முடிவில் சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் கூறியதாவது, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்வோருக்கு வரும் 17ம் தேதி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
மேலும், பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். முகக்கவசம் அணிந்து வராவிட்டால் கண்டிப்பாக பெட்ரோல், டீசல் தரப்படாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் இல்லாவிட்டால், எரிபொருள் இல்லை என்று முடிவு எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.