மருத்துவ மேற்படிப்பில் காலியாக இருந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த, தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்க கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி, சந்தோஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் காலியாக இருந்த 74 மருத்துவ மேற்படிப்பு இடங்களை தனியார் கல்லூரிகளுக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
ஆண்டுதோறும் காலியிடங்களை நிரப்புவதற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சேர்க்கும் நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன எனக்கூறிய நீதிபதி, தகுதி இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதை தொடர அனுமதித்தால், அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி இழைப்பதற்கு சமம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தகுதி இல்லாமல் பணம் கொடுத்து மருத்துவ மேற்படிப்பு இடங்களை விலைக்கு வாங்கும் மாணவர்களால், இந்த சமுதாயத்திற்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த நீதிபதி, மருத்துவ படிப்புகளுக்கு இடம் பெற பணம், மேலிட தொடர்பு மற்றும் அதிகாரம் ஆகியன முக்கிய காரணியாக இருக்க கூடாது என்றும், தகுதி மட்டுமே காரணியாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது, மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?, கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்ற விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும் என தெரிவித்து, இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த தமிழக டி.ஜி.பி.க்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணை குறித்த அறிக்கையை ஜனவரி 30-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.




