கொண்டாட்டங்களை தவிர்த்து மக்களின் திண்டாட்டங்களை போக்கும் தினமாக எனது பிறந்தநாளை மாற்றிக்காட்டுங்கள் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கூறினார்.
நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். 5 வயதிலேயே நடிப்புத்துறைக்கு வந்த கமல்ஹாசன் 61 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்துவிட்டார். முதல் படமான களத்தூர் கண்ணம்மாவிலேயே தேசிய சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதைப் பெற்றர். இதுவரை 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், பத்மபூஷன், பத்மஸ்ரீ, செவாலியே விருது என ஏராளமாய் குவித்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா சூழல் கொண்டாட்டத்திற்கு உரியது அல்ல. நமக்கு பல வேலைகள் காத்திருக்கின்றன. எனது பிறந்தநாளில் நற்பணிகளை செய்யுங்கள். அதுவே நீங்கள் எனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு.
தெருக்களில் இறங்கினால் கோடி பிரச்சினைகள் காத்திருக்கின்றன. தேடி தீர்ப்போம் வா என்ற வாக்கியத்தை மனதில் ஏந்தி நற்பணிகளை செய்யுங்கள். தேர்தலில் வென்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தில் சீரமைக்கப் போவதன் முன்னோட்டமாக நமது காரியங்கள் எனது பிறந்த நாளில் இருந்தே தொடங்கட்டும் நம்முடைய மரபணுவை மைக்ரோஸ்கோப்பில் சோதித்தால் நேர்மை, திறமை, அஞ்சாமை ஆகிய மூன்றும்தான் எதையும் விட எஞ்சி நிற்கும் என்பதை நெஞ்சு நிமிர்த்து சொல்லும் திமிர் நமக்கு உண்டு.அத்திமிர் என்றென்றும் தொடரட்டும். கொண்டாட்டங்களை தவிர்த்து மக்களின் திண்டாட்டங்களை போக்கும் தினமாக எனது பிறந்தநாளை மாற்றிக்காட்டுங்கள்
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.