காஞ்சிபுரத்தில் வசதியின்மையால் உணவுப் பொருட்களை கழிப்பறையில் வைத்து பயன்படுத்தி வந்த முதியவருக்கு, பசுமை வீட்டுக்கான ஆணை வீடு தேடி சென்று வழங்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம், துளசாபுரம் ஊராட்சியை சேர்ந்த கண்டிவாக்கத்தில் வசித்து வரும் குப்பன் எனும் முதியவர், தனது குடிசை வீட்டிற்கு கதவுகூட இல்லாத நிலையில் உணவுப் பொருட்களை அரசு கட்டிக் கொடுத்த இலவச கழிப்பறையில் வைத்து பயன்படுத்தி வந்துள்ளார்.
இதுதொடர்பான தகவல்கள் ஊடகங்களிலும் ,சமூக வலைத்தளங்களிலும் பரவ தொடங்கின. இதையறிந்த
ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், முதியவர் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, தினகரனும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதரும் குப்பனுக்கு முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்க, ஆட்சியர் பா.பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் குப்பனுக்கு பசுமை வீடு வழங்க நிர்வாக அனுமதி உத்தரவை வழங்கினார்.
இந்த உத்தரவை ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், குப்பன் இல்லத்துக்கே நேரில் சென்று அவரிடம் வழங்கினார். அவர் வீடு கட்டுவதற்கு தேவையான அம்மா சிமென்ட் வழங்குவதற்கும் பரிந்துரை செய்துள்ளார். இந்த வீடு கட்டி முடிக்கும்வரை தன்னார்வலர் ஒருவர் மூலம், முதியவரை வேறிடத்தல் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




