தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் நீர் தேவை குறைந்துள்ள காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே கடந்த 15ம் தேதி நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து 16ம் தேதி தண்ணீர் திறப்பு 10,000 கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தண்ணீரின் அளவு 7,000 கன அடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பாசன தேவை குறைந்துள்ளதினாலேயே தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.69 அடியாக இருந்தது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 6,563 கன அடியாகவும், நீர் இருப்பு 28.30 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் மேலும் மேட்டூர் அணைக்கான தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் வேகமாக சரிந்து வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது உயர தொடங்கியுள்ளது.