கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனைகள் மட்டும் சுமார் 50க்கும் அதிகமான மருத்துவமனைகள் பரிசோதகைகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அதிகளவில் கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அந்த மருத்துவமனையில் ஆய்வு கொண்ட அரசு அதிகாரிகள் அதிகளவில் கட்டணம் வசூலித்ததை உறுதி செய்தனர். இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கான அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.