கேரளாவில் நாணயத்தை விழுங்கியதால் உயிரிழந்த 3 வயது சிறுவனுக்கு, கொரோனா கட்டுப்பாட்டு பகுதியை சேர்ந்தவன் என்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் ஆலுவா பகுதியைச் சேர்ந்த ராஜு – நந்தினி தம்பதியின் 3 வயது மகன் பிருத்விராஜ், விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நாணயத்தை விழுங்கியிருக்கிறான். இதையறிந்த பெற்றோர் உடனடியாகப் சிறுவனை அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கு குழந்தைகள் மருத்துவர் இல்லை எனக்கூறி எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரைத்து உள்ளனர். இதையடுத்து, அங்கு கொண்டு சென்ற போதும் அதே பதிலை கூறி, ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும்படி தெரிவித்துள்ளனர்.
இறுதியாக ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றபோது, அங்குள்ள மருத்துவர்கள் வாழைப்பழமும் தண்ணீரும் கொடுத்தால் நாணயம் சிறுவனின் வயிற்றுக்குள் இறங்கிச் சென்றுவிடும் என்றும், பின்னர் மலம் கழிக்கும்போது நாணயம் தானாக வெளியேறிவிடும்’ என்றும் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, சிறுவனை பெற்றோர்கள் வீட்டிற்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில், அவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து சென்றதால் குழந்தையை சிகிச்சைக்கு அட்மிட் செய்ய ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மறுத்துவிட்டதாகக் குழந்தையின் தாய் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சிறுவன் நாணயம் விழுங்கியதை மருத்துவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தாய் கதறி அழுத்துள்ளார்.

இதுகுறித்து ஆலுவா தாலுகா மருத்துவமனை அதிகாரி கூறும்போது,`குழந்தைகள் அறுவைசிகிச்சை மருத்துவர் இல்லாததால் எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். எக்ஸ்ரே எடுக்கும்போது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்தா வருகிறீர்கள் என சாதாரணமாக கேட்டோம்” என்றார். குழந்தையின் சிறு குடலில் நாணயம் சிக்கியிருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்க கேஸ்ட்ரோ சர்ஜன் இல்லாததால் ஆலப்புழா மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்ததாக எர்ணாகுளம் பொது மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சிறுவன் மரணம் அடைந்தது குறித்து விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உத்தரவிட்டுள்ளார். தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.