புளியந்தோப்பு கட்டடம் குறித்து ஐஐடி நிபுணர் குழு சமர்ப்பித்த 441 பக்க அறிக்கை குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து, அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் தொகுப்பாக இருக்கின்றன. உதிரும் கட்டடத்தில் வாழவே மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்களிடம் இருந்து குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் கட்டடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய ஐஐடி சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, கட்டுமான குறைபாடு குறித்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவனக்குறைவாக இருந்த குற்றச்சாட்டில் குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குனர் கோவிந்திராவிடம், கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தின் தரம் குறித்த இறுதி ஆய்வறிக்கையை ஐஐடி நிபுணர் குழு தாக்கல் செய்த நிலையில், ஐஐடி நிபுணர் குழு சமர்ப்பித்த 441 பக்க அறிக்கை குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.