இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் அல்ல என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தாய்மொழிக் கல்வி
கொரோனா நேரத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி, குறைகளைச் சரிசெய்து, அதன்பிறகே செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதே சரியாக இருக்கும். தாய்மொழிக் கல்வி கட்டாயம் என்பதை 8ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விதான் என்று அறிவிக்க வேண்டும்.
இந்தி, சமஸ்கிருதம்
மூன்றாவது மொழியாக எந்தக்காலத்திலும் இந்தி அல்லது சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டோம் என வெளிப்படையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். 3, 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுமைக்கும் என்.சி.இ.ஆர்.டி. மட்டுமே பாடத்திட்டங்களை உருவாக்கும் என்று கூறப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. அந்தந்த மாநிலங்களில் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவதே சரியாக இருக்கும். இதேபோன்று உயர் படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.