திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கிசான் கிரடிட் கார்டு, வேளாண் பயிர்க் கடன், சிறு, குறு விவசாய கடன், முதலீட்டுக் கடன், நகைக் கடன். கைத்தறிக் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறு வணிகக் கடன், டாம்கோ, டாம்செட்கோ, மகளிர் சுயஉதவிக் குழு கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொது வினியோகத் திட்டம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு வங்கி, அம்மா மருந்தகம், கூட்டுறவு மருந்தகம், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், அம்மா நகரும் ரேஷன் கடைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மற்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தமிழக முதல்-அமைச்சர் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமான அம்மா நகரும் நியாய விலைக் கடையை செயல்படுத்தி, ஒரு சாமானியனின் முதல்-அமைச்சராக திகழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த தண்டிக்கப்படுவார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது. எந்த அறிவிப்பாக இருந்தாலும் தமிழக முதல்-அமைச்சர்தான் அறிவிப்பார். முன்னதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.