ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 6 மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நிதித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின் கீழ் ஊரக வளர்ச்சி பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் கரூர், ஈரோடு, திருப்பத்தூர், தஞ்சாவூர் மற்றும் தென்காசி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி பகுதிகளில் 8.24 லட்சம் மக்கள் பயன்பெற 1347.05 கோடி ரூபாய் மதிப்பில் குழாய் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அரசின் நிர்வாக அனுமதியோடு செயல்படுத்தப்பட இருக்கிறது.மேலும்,திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, கந்திலி , திருப்பத்தூர் பகுதி ஒன்றியங்களில் உள்ள 759 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 182.09 கோடி ரூபாய் செலவில் குடிநீர் இணைப்பு திட்டமும்,இதேபோல் கரூர், தஞ்சாவூர் கும்பகோணம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் வசதி இல்லாத பகுதிகளில் இதே திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.