
இன்று 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிரச்னையால் பள்ளிகள் வழக்கம் போல இயங்காமல் இருந்தன.
தற்போது நோய் பரவல் கட்டுக்குள் இருப்பதால், பள்ளிகள் வழக்கம் போல செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடை விடுமுறையை தொடர்ந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணையை கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது.
இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகளுக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைப்பட்டது. எனினும் இணைய வழி மூலமாக கல்வி கற்பிக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள்
பள்ளிகளுக்கு வந்துள்ளனர். அவர்களிடம் கனிவுடனும் அரவணைப்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும், மாநிலம் பயன்பெறட்டும் என முதல்வர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.