தமிழகத்தில் வெளியாகியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 100% அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில், கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்ணை கணக்கிடப்பட்டு, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை அறிவித்தது.
அதன்படி, 10ம் வகுப்பு மதிப்பெண் விபரம் காலை, 9:30 மணிக்கு வெளியானது. அதன்படி, தேர்வு எழுதிய 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில், 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 மாணவிகளும், 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து, பல ஆண்டுகளாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று வந்த நிலையில் இம்முறை மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளிகளில் மாணாக்கர்கள் அளித்த மொபைல் போன் எண்ணுக்கும் தேர்வு முடிவு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும்17ம் தேதி முதல், 21ம் தேதி வரை மாணாக்கர்கள் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண் தொடர்பான புகார்களை, தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம் என வலியுறுத்தபட்டுள்ளது.




