ஆகஸ்ட் மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு, வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில், கொரோனா காரணமாக ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களைப் பெற, இன்று முதல் டோக்கன் விநியோகிக்கும் பணியில், ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று மற்றும் 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள்கள் வழங்கப்படமாட்டாது, என ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, ரேசன் கடைகள் செயல்படும் எனவும், 7-ஆம் தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் எனவும் உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.