உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 438-வது ஆண்டு திருவிழா பக்தர்கள் பங்கேற்புயின்றி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த பேராலயம் கத்தோலிக்க திருச்சபையால் பசிலிகா அந்தஸ்து பெற்றது. இந்த தேவாலயத்திற்கு இந்துக்கள், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள் என ஜாதி,மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் வருகை தருவர். இந்த ஆலயத்தில் திருவிழா ஆண்டு தோறும் ஜீலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆலயத்தின் 438-வது ஆண்டு திருவிழாவின் கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில், ஆலய பங்குதந்தை குமார்ராஜா சிறப்பு திருப்பலி நடத்தினார். தொடர்ந்து ஆலயத்தில் இருந்து மாதா உருவம் பொறிக்கப்பட்டிருந்த கொடி ஆலயத்தின் முன்புறம் உள்ள கொடி மரத்திற்கு கொண்டு வரப்பட்டது, பின்னர் ஆயர், குருக்கள் சேர்ந்து அர்ச்சிப்பு செய்து ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள், பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. ஆலயத்தில் திருவிழா நற்கருணை ஆசீர், திருப்பலி நிகழ்வுகள் அனைத்தும் ஆலயத்துக்குள் மட்டும் நடைபெற்றன. இதனை நேரலையாக உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் இனையதளம் மூலமாக ஒளிபரப்பு செய்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் மற்றும் திருப்பலி திருவிழா நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், ஆண்டுத்தோறும் திருவிழா நேரத்தில் லட்சக்கணக்கான மக்களால் நிரம்பி வழியும் ஆலய வளாகம், அதை சுற்றியுள்ள பகுதிகள் இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து, போலீசார் பாதுகாப்பு பணிக்காக. எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வன், டிஎஸ்பி. கணேஷ் கண்காணிப்பில், 800 போலீசார் ஆலய பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.