
விக்கிப்பீடியா தன் பயனாளர்களுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளது. ‘நீங்கள் ரூ .150 நன்கொடை அளித்தால், விக்கிபீடியா பல ஆண்டுகளாக செழித்துக் கொண்டே இருக்கும்’ என்று வலைத்தளம் தன் செய்தியில் தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க பலரும் பல ஆண்டுகளாக , விக்கிபீடியாவை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். நம் அண்டத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் விக்கிப்பீடியாவில் தெரிந்து கொள்ளலாம். பள்ளி கல்லூரிகளில் படிப்பவர்கள் முதல் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், தொழில்நுட்பம், செய்திப்பிரிவு, சமூகப்பணி, சினிமா வரலாற்று ஆசிரியர்கள் என பல துறையை சேர்ந்தவர்களுக்கும் தகவல்களை தரும் களஞ்சியமாகவும் வழிகாட்டியாகவும் விக்கிப்பீடியா உள்ளது.
தன்னார்வ முறையில் செயல்படும் விக்கிப்பீடியா விளம்பரதாரர்கள் உதவியில்லாமல் முற்றிலும் தன்னார்வலர்கள் உதவியினால் தான் செயல்படுகிறது. அவ்வப்போது பொதுமக்களிடம் நிதி உதவியை நாடும் விக்கிபீடியா தற்போது இந்திய பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

விக்கிபீடியா வெளியிட்டுள்ள அறிவிப்பில்
விக்கிபீடியாவின் சுதந்திரத்தை பாதுகாக்க நாங்கள் உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் வாசகர்களில் 98% பேர் பொதுவாக நன்கொடை வழங்குவதில்லை. அவர்கள் பல்வேறு வழிகளில் நன்கொடை வழங்குவதை தவிர்த்து விடுகின்றனர்.
உங்கள் வாழ்வில் விக்கிப்பீடியா ரூ 150 அளவுக்காவது உதவியிருந்தால் நீங்கள் எங்களுக்கு உதவலாம். நீங்கள் ரூ .150 நன்கொடை அளித்தால், விக்கிபீடியா பல ஆண்டுகளாக செழித்துக் கொண்டே இருக்கும்” என்று அந்த அறிவிப்பு தொடர்கிறது.