நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத எத்தனையோ விஷயங்களில் கொசுவும் ஒன்றாகிவிட்டது. அந்த அளவிற்கு கொசு நம் நாட்டின் பெரும்பலான பகுதிகளில் நீக்கமற நிறைந்துள்ளது. கொசு கடித்தால் ஊசி குத்தியதைப் போல் வலிக்கும், தட்டினால் ஓடி விடும். சில வகை கொசுக்கள் கடித்தால் அதிகபட்சம் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும். இது நாம் அனைவரும் அறிந்தது தான். ஜெர்மனியில் கொசு கடித்ததால் ஒருவர் கோமா நிலைக்கு போயுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான்.
ஜெர்மனி நாட்டின் ரோடர்மார்க் நகரில் வசிப்பவர் செபாஸ்டியன் ரோட்ஸ்கே. தொழிலதிபரான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கோடை காலத்தில் கொசுக் கடியால் நோய் வாய்ப்பட்டிருக்கிறார். அவரைக் கடித்தது ஆசிய டைகர் வகை கொசு என்கிறார்கள்.
இந்த வகை கொசுக்கள் கடித்தால் ஒரு வகையான மூளை அழற்சி, டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்பதால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன, ஆனால் செபாஸ்டியனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே சென்றிருக்கிறது. மருத்துவர்களும் என்னென்னவோ சிகிச்சைகள் கொடுத்துள்ளனர். ஆனாலும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. செபாஸ்டியனின் ரத்தம் முழுவதும் விஷத்தன்மை ஏறியுள்ளது.
இதனால் அவரது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வந்துள்ளன. உடல் நிலை மோசமடைந்து வருவதை முன்னிட்டு செபாஸ்டியனுக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 30 அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டத்தில் செபாஸ்டியனின் இரண்டு பாதங்களில் பெருமளவு வெட்டி எடுக்கும் நிலை ஏற்பட்டு அதையும் செய்திருக்கிறார்கள்.
மேலும், செபாஸ்டியனின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உள்ளுறுப்புகளும் பாதிக்கப்பட்டன. ரத்தம் நச்சானதால்உடலின் உள் உறுப்புகள் தொடர்ந்து செயல்பட முடியாமல், பாதிப்புகளை சந்தித்து வந்துள்ளன. மேலும் 4 வாரக் காலங்களுக்கு அவர் கோமா நிலைக்கும் சென்றுள்ளார். செபாஸ்டியன் வெளிநாடு எங்கும் செல்லவில்லை. ஜெர்மனியில் தான கொசுக் கடிக்கு ஆளாகியுள்ளார்.
உடல் நிலை மோசமடைந்து வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செபாஸ்டியன், கொசுக் கடிக்கு ஆளான பிறகு தனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும், உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதையடுத்து தான் மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறியுள்ளார். நாளுக்கு நாள் உடல் நிலை மோசமடைந்து தனது இடது தொடை சீல்பிடித்து தான் மிகப்பெரிய வேதனையை அனுபவித்தாகவும், ஒரு கட்டத்தில் கோமா நிலைக்கு தன் உடல்நிலை சென்றுவிட்டதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
தற்போது செபாஸ்டியன் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இனியும் சாதாரண கொசு தானே என அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்.