சூரியக்கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோயில் 11 ¼ மணிநேரம் மூடப்பட்டு இருக்கும் என திருமலா, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் கூறியிருப்பதாவது: அக்டோபர் 25ம் தேதி மாலை 5:11 மணியில் இருந்து மாலை 6:27 வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதன் காரணமாக, அக்டோபர் 25ம் தேதி 9 மணி நேரத்திற்கு முன்னதாக, திருப்பதி ஏழுமலையான் கோயில் கதவுகள் காலை 8:11 மணியில் இருந்து இரவு 7:30 மணிவரை சுமார் 11 ¼ மணிநேரம் மூடப்பட்டு இருக்கும். அன்று கோயில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி , ₹300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் தரிசனம், பாதுகாப்பு பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. அன்று இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
இதேபோல், நவம்பர் 8ம் தேதி மதியம் 2:39 மணியில் இருந்து மாலை 6:27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. அன்று காலை 8:40 மணியில் இருந்து இரவு 7:20 மணிவரை சுமார் 10 மணிநேரம் திருப்பதி ஏழுமலையானின் கோயில்கதவுகள் மூடப்பட்டு இருக்கும். அன்றைய தினமும் சாதாரண பக்தர்களுக்கு மட்டுமே கோயிலில் சென்று வழிபட அனுமதி அளிக்கப்படும். இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.