புதிய மின் இணைப்புக்கான பல்வகை கட்டணமும் ஒரு முனைக்கு ₹9,250 ஆகவும், மும்முனைக்கு ₹9,600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை , மும்முனை என இரு பிரிவுகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. புதிய மின் இணைப்பு வழங்கும் போது பதிவுக் கட்டணம், இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம்,வைப்புத்தொகை ஆகியவற்றை உள்ளடக்கி பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் இதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு முனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில் பதிவுக் கட்டணம் ₹200, இணைப்பு கட்டணம் ₹1,000, மீட்டர் காப்பீடு ₹750, வளர்ச்சி கட்டணம் ₹2,800, வைப்புத்தொகை 300 என மொத்தம்₹5,050 உயர்த்தப்பட்டுள்ளது. கேபிள் மின் விநியோகிக்கும் இடங்களில் பதிவு கட்டணம் ₹200, இணைப்பு கட்டணம் ₹1,000 மீட்டர் காப்பீடு ₹750, வளர்ச்சி கட்டணம் ₹7,000, வைப்பு தொகை ₹300 என மொத்தம் ₹9,250 அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்முனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில் பதிவுக் கட்டணம் ₹200, இணைப்பு கட்டணம் ₹1,500, மீட்டர் காப்பீடு ₹2,000, வளர்ச்சி கட்டணம் கிலோ வாட்டிற்கு ₹2,000, வைப்புதொகை கிலோ வாட்டிற்கு ₹900 என மொத்தம் ₹6,600 உயர்த்தப்பட்டுள்ளது. கேபிள் மின் விநியோகத்திற்கு பதிவு கட்டணம் ₹200,இணைப்பு கட்டணம் ₹1500, மீட்டர் காப்பீடு ₹2000, வளர்ச்சி கட்டணம் கிலோ வாட்டிற்கு ₹5,000, வைப்புதொகை கிலோ வாட்டிற்கு ₹900 என மொத்தம் ₹9,.600 உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு ஆள் இல்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படவுள்ளது. அப்போது, ஒரு முனை மின் இணைப்பிற்கு மீட்டர் வைப்பு தொகையாக ₹5,200ம், மும்முனை இணைப்பிற்கு ₹7,100ம் வசூலிக்கப்படும். வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான கட்டணம் ₹300ல் இருந்து ₹600 ஆகவும், உயரழுத்த பிரிவில் ₹3000ல் இருந்து ₹6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உயரழுத்த பிரிவில் மீட்டர் வாடகை கட்டணம் ₹2600ல் இருந்து ₹3700 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் ஒருமுனை இணைப்பிற்கு₹500லிருந்து ₹1000 ஆகவும், மும்முனை இணைப்பிற்கு ₹750லிருந்து ₹1500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.