முக்கிய பொறுப்பில் இருக்கும் 10,000 இந்தியர்கள் உள்ளிட்ட உலகமெங்கும் சுமார் 24 லட்சம் பேரை சீனா கண்காணித்து வருவது அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவை வீழ்த்தி உலக வல்லரசு நாடும் எனும் பெருமையை பெற சீனா பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பொருளாதாரம், உலக நாடுகளுடனான நட்பு, எல்லை விரிவாக்கம் என பல பணிகளை முன்னெடுக்கும் சீனா, அதேசமயம் பிற நாடுகளின் வளர்ச்சியையும் ரகசியமான முறையில் தீவிரமாக கவனித்து வருகிறது.
அந்த வகையில், சீனாவின் கண்காணிப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கும் 10,000 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, தற்போது உலகமெங்கும் சுமார் 24 லட்சம் பேர் இந்த வலையில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான பட்டியலில் இதுவரை, 2, 50,000 பேர் தொடர்பான தகவல்களே தற்போது வெளியாகியுள்ள நிலையில், சீனா இந்த ரகசிய கண்காணிப்பு நடவடிக்கையை பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கண்காணிப்பு வளையத்தில், அமெரிக்க நாட்டவர்கள் 52,000 பேர், ஆஸ்திரேலிய நாட்டவர்கள் 35,000 பேர், இங்கிலாந்தை சேர்ந்தவ 9,700 பேர்,கனடா நாட்டவர் 5,000 பேர், இந்தோனேசிய நாட்டவர் 2,100 பேர், முக்கிய பொறுப்புகளில் இருக்கும் மலேசிய நாட்டவர்கள் 1,400 பேர், நியூசிலாந்து நாட்டவர்கள் 793 பேர் என்ற பட்டியலை சீனாவின் குறிப்பிட்ட நிறுவனம் தொகுத்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகமெங்கும் ரகசியமாக செயல்படும் 20 நிறுவனங்கள் மூலமாகவே சீனா இந்த முக்கிய நபர்களின் தகவல்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.இதில் ஒரு நிறுவனம் அமெரிக்காவின் கான்சாஸ் பகுதியிலும் இன்னொன்று தென் கொரிய தலைநகரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
முக்கியமாக, பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான தகவல்களுக்கு மட்டுமே அந்த நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சேகரித்துள்ள தகவல்கள் அனைத்தும் சீனா அரசுக்கும் ராணுவத்திற்கும் பயன்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் முதல் குற்றவாளிகள் வரை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மட்டுமின்றி சீனாவின் ரகசிய தகவல் சேகரிப்பு நிறுவனங்களில் எஞ்சிய 18 ரகசிய நிறுவனங்கள் எங்கே இருந்து செயல்படுகிறது என்பது கண்டறியப்பட்டால் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேலும் தீவிரமாக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.




