ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கோலங்கள் இடம் பெறுகின்றன.
வாஷிங்டன் :
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். வருகின்ற ஜனவரி 20 ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவி ஏற்கவுள்ளார். அவரை தொடர்ந்து இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி ஏற்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6 ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவின் போது டிரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக ,ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போதும் நாடாளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்க பார்லிமென்ட் கட்டிடத்தின் முகப்பில் அமெரிக்கவாழ் இந்தியர்கள், பிரமாண்ட கோலங்களை உருவாக்கி வருகின்றனர். எனினும் பாதுகாப்பு நடவடிக்கையாக கோலங்களை வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால், பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பப்படும் காணொளி காட்சி மூலம் காட்சிப்படுத்த இருக்கின்றனர். இந்த கோலத்தினை 1,800க்கும் அதிகமானோர் இணைந்து கோலங்களை உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் துணை அதிபராக பதவியேற்க இருக்கும் முதல் பெண் என்ற பெருமை இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் பெற இருக்கிறார். அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.