சீனாவின் டிக் டாக், வீசாட் உள்ளிட்ட மொபைல் செயலிகளைத் தடை செய்யும் முடிவு குறித்து சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் டிக் டாக், வீசாட் உள்ளிட்ட சீனச் செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் அதிபர் ட்ரம்ப்புக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், “சீனாவின் 50 செல்போன் செயலிகளைத் தடை செய்து இந்தியா மிகச்சிறந்த முடிவை எடுத்துள்ளது. அதேபோல, அமெரிக்கச் சந்தையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய சீனாவின் செல்போன் செயலிகளான டிக் டாக், வீசாட், ஷேர் சாட் போன்ற செயலிகளுக்குத் தடைவிதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தச் சீனச் செயலிகளைப் பயன்படுத்தினாலே பயன்படுத்துவோரின் சுயவிவரங்களை நம்முடைய அனுமதியின்றி எடுத்துக்கொள்ளும். இந்தச் செயலிகள் அனைத்தும் மக்களிடம் இருந்து விவரங்களைத் திருடி சீனாவுக்கு அளிக்கின்றன. இந்தச் செயலிகள் மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு நிச்சயம் அச்றுத்தல் இருக்கிறது. அமெரிக்க மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்தச் சீனச் செயலிகளுக்கு அமெரிக்க அதிபர் தடை விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளனர்.