பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும், ‘ஹைட்ராக்சிக்ளோரோக்வின்’ மருந்துக்கு ஆதரவாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா’ வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் அதிகரித்தபோது, ‘மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மருந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்த பலனை அளிக்கிறது’ என, டிரம்ப் கூறியிருந்தார். இந்தியாவிடம் இருந்து இந்த மருந்தையும் அவர் வாங்கியுள்ளார்.
ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த, புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் டாக்டர் ஆன்டனி பாசி இதை நிராகரித்தார். எப்.டி.ஏ., எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பும், இந்த மருந்தை ஆதரிக்கவில்லை.கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, இந்த மருந்தை அளிக்கும்போது, மாரடைப்பு உட்பட பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவ ஆராய்ச்சிகளில் தெரிய வந்தது. அதனால், இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மருந்துக்கு ஆதரவாக, டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

“இந்த மருந்து நல்ல பலனை தருவதாக, சில மருத்துவர்கள் கூறியதாக, ‘வீடியோ’ ஒன்றை, சமூக வலைதளங்களில் டிரம்ப் சமீபத்தில் வெளியிட்டார். இது, ‘உண்மைக்கு மாறான செய்தி’ என, டிரம்ப் வெளியிட்ட செய்தியை, ‘ட்விட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நீக்கியுள்ளன. இருந்தாலும், இந்த மருந்துக்கு ஆதரவாக, டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடக்க கட்டத்தில் உள்ளவர்களுக்கு, ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மருந்து சிறந்த பலனை அளிக்கிறது. நானும் இந்த மருந்தை, 14 நாட்கள் எடுத்துக் கொண்டேன். நான் நன்றாக உள்ளேன். இந்த மருந்து நீண்ட காலமாக உள்ளது. மலேரியா உள்ளிட்டவற்றுக்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்த மருந்தால் பாதிப்பு ஏற்பட்டதாக, இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை.கொரோனாவுக்கு இந்த மருந்தை அளிக்கலாம் என, பல மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கு அரசியலே காரணம் என்று நினைக்கிறேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
.