உலகமே உற்று நோக்கும் உலகத்தின் மிக அதிகாரமிக்க பதிவியான அமெரிக்காவின் அடுத்த அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக தேர்தல் தள்ளிப்போகும் என்ற சூழ்நிலையில் தேர்தல் தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது இந்தத் தோ்தலில், முக்கிய கட்சிகளான ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் , குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் வேட்பாளராக தன்னை அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இந்த தேர்தல்தான் முக்கியத் தேர்தலாக இருக்கப் போவதாக கூறினார். தனக்கு எதிராக போட்டியிடும் ஜோ பிடன் கடுமையாக தாக்கிய ட்ரம்ப், அனைத்து பிரச்சனைகளிலும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டையே ஜோ பிடன் எடுத்து வருவதாக குற்றம்சாட்டினார்

கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் உயிரிழப்பு சதவிகிதம் மிகவும் என்றும், அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாலேயே பாதிப்பு அதிகமாக காணப்படுவதாகவும் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியா தான் மிக அதிக சோதனைகளைச் செய்வதாகவும் அவர் கூறினார்.
அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், முக்கிய காரணிகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.அதன்படி தீவிர நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதாக பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக ட்ரம்பின் குழுவினர் அறிவித்துள்ளனர். அமெரிக்காவை மீண்டும் வலிமையான பொருளாதார சக்தியாக மாற்றுவது, ட்ரம்ப் கறுப்பினத்தவருக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உடைப்பது, சட்டம் ஒழுங்கை கட்டிக் காத்தது என்ற பிரச்சாரங்களை முன்னெடுக்க குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.




