மர்ம நபர்கள் சாலையில் ஓடி கொண்டிருந்த கார் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாகவே துப்பாக்கி ஆசாமிகளின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.எனவே துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.இந்தநிலையில் லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால்சரமாரியாக சுட்டனர்.
இதில் அந்த காரில் இருந்த இப்ரி காம்ஸ் என்கிற 3 வயது பச்சிளம் குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தத்தில் அந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் கார் டிரைவர் பலத்த காயத்தோடு மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த தாக்குதல் செய்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பேடன் ரூஜ் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பக்கத்தில் ‘‘இன்று இரவு நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த சம்பவத்தால் என் இதயம் வலிக்கிறது. அந்த குழந்தையின் வாழ்வை சமூகம் மதித்திட வேண்டும் இதை யார் செய்தார்கள் என்பது குறித்து உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.