தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்தே அரசுக்கு மக்களிடம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக திமுக அரசுக்கு இல்லத்தரசிகளிடம் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறு வியாபாரம் செய்யும் மகளிரின் சுமையைக் குறைக்கும் வகையில் அரசு பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழகத்தில் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் அதாவது டவுன் பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தது. அதன்படி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், முதல் நாளே மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என 5 முத்தான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார்.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென மாநகர அரசு பேருந்தில் ஏறி ஆய்வு நடத்திய பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பும் வழியில் டிரைவரிடம் திடீரென்று காரை நிறுத்த சொல்லியிருக்கிறார்.
டிரைவருக்கும் ஒண்ணும் புரியாமல் காரை நிறுத்தியுள்ளார். காரை விட்டு இறங்கிய ஸ்டாலின், விறுவிறுவென்று அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்துள்ளார். அப்போது பாதுகாப்பிற்காக உடன் வந்த அதிகாரிகள் சற்றுநேரத்திற்கு திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர், குறிப்பாக பெண் பயணிகளிடம் இலவச பேருந்து சேவை எவ்வாறு பயனளிக்கிறது, பேருந்துகள் முறையாக கிடைக்கிறதா? என பல கேள்விகளை கேட்டறிந்தார்.