ஒரு பெண் எப்போது இரவில் தனியாக சாலையில் பாதுகாப்புடன் நடந்து சென்று வருகிறாளோ அன்று தான் நாட்டிற்கு முழு சுதந்திரம் என்று காந்தியடிகள் சொன்னார். ஆனால் இன்றைய நிலைமையில் ஒரு பெண்ணால் அவள் சொந்த வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

கால மாற்றங்களில் நாகரீக வளர்ச்சியும் கலாச்சார வளர்ச்சியும் மேலாகிவிட்டது. கல்வி கற்க கூட உரிமையற்று இருந்த பெண்கள் இன்று வானூர்தி ஓட்டுகிறோம். ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன் காந்தியின் கனவு மட்டும் முன்னேற்றம் இல்லாமல் இன்னும் பின்னுக்கு போகி விட்டது.
ஆண் பெண் புணர்ச்சி என்பது உணர்வுகளை தாண்டி வன்முறையாக மாறிவிட்டது. ஆசைப்பட்ட பெண்ணை அடைய நினைப்பது, எனக்கு கிடைக்காதவள் இனி யாருக்கும் கிடைக்க கூடாது என பழி தீர்ப்பது என ஆரம்பித்து இப்போது கடந்து செல்லும் பெண் மேல் ஆசைக் கொண்டு அவள் மீது வன்முறை ஆட்டங்களை அவிழ்த்து விடுவது என்று நாளொரு விதமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் முன்னேறி கொண்டே போகின்றன.
சதை தின்னும் கழுகுகள்:
ஒரு பெண்ணை பல பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்வது, அவள் உடல் உறுப்புகளை காயப்படுத்துவது, வெட்டி எடுப்பது, எலும்புகளை உடைப்பது, அந்தரங்க உறுப்புகளில் இரும்பு கம்பிகளை நுழைப்பது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த சதை தின்னும் கழுகுகள்.
இந்தியாவிற்கு ஹத்ராஸ் வழக்கு ஒன்னும் புதிதல்ல சமூக வலைத்தளங்களை இன்று ஒரு புதிய ஹாஷ்டாக் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் வேறு ஒரு பெண்ணின் பெயரோ அவள் பிறந்த ஊரோ ஹாஷ்டாகாக வரத்தான் போகிறது.
இதுவரை இந்தியா சந்தித்த வழக்குகள்:
மதுரா கற்பழிப்பு வழக்கு:
குற்றவாளிகள் காவல்துறைக்கு பயந்த காலம் போய் காவலர்களே குற்றவாளிகள் ஆன வழக்கு தான் மதுரா வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் 1972 ஆம் ஆண்டு மதுரா என்னும் வயது பெண் காவலர்களால் காவல் நிலையத்திலேயே கற்பழிக்கப்பட்ட வழக்கு தான் முதன் முதலில் இந்தியாவில் பரவலாக பேசப்பட்டது.
அருணா சென்பேக் வழக்கு:
மும்பையில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றிய அருணா ஷென்பக்கை அதே மருத்துவமனையில் வார்டு பாயாக இருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சோஹன் லால் பாரதி வால்மிகி என்பவர் கடந்த 1973ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அருணா கோமா நிலைக்கு சென்றார். 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்த அருணா கடந்த 2015 ஆம் ஆண்டு 18ம் தேதி மரணம் அடைந்தார். ஆனால் இதற்கு காரணமான சோஹன்லால் விடுதலை செய்யப்பட்டார்
ஸ்கேர்லெட் கீலிங் வழக்கு:
2008 ஆம் ஆண்டு கோவாவுக்கு சுற்றுலா வந்த பிரிட்டிஷ் இளம்பெண் ஸ்கேர்லெட்டே கீலிங் என்னும் 15 வயது பெண்ணை கற்பழித்து கடலில் தூக்கி எறிந்தனர். இது அயல் நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
நிர்பயா வழக்கு:
நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு நிர்பயா வழக்கு ஓடும் பேருந்தில் ஆறு நபர்களால் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் குற்றவாளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது
பிரியங்கா ரெட்டி வழக்கு:
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு தீயிலிட்டு எரிக்கப்பட்டார். இதுவரை நடந்த வழக்குகளில் அரசன் அன்று கொல்வான் என்பதற்கு ஏற்றவாறு தண்டனை வழங்கப்பட்டது குற்றம் நடந்த இடத்திலேயே நால்வரும் சுட்டு கொல்லப்பட்டனர்
ராமர் பிறந்த பூமியில் இன்றைய சீதைகளின் அவல நிலை!
ராமர் பிறந்த அயோத்தி இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் அடுக்கடுக்காக அரங்கேறி வரும் பாலியல் குற்றங்கள்.
உன்னாவ் வழக்கு என்பது ஜூன் 4, அன்று 2017 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு 17 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்காகும். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர் உத்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான குலதீப் சிங் செங்கர் ஆவார். இவ்வழக்கு சிபியையால் விசாரிக்கப்பட்டது. ஏப்ரல் 8, 2018 அன்று பாதிக்கப்பட்ட பெண், உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார். கைதுசெய்யப்பட்டு விசாரணைக் காவலில் இருக்கும்போது அப்பெண்ணின் தந்தை மரணமடைந்தார். 2019 ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 2 பெண்கள் மற்றும் அவரது வழக்கறிஞர் காரில் சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த ஒரு லாரி கார் மீது மோதியது. அதில் அந்த பெண்ணின் அவரது உறவினர்கள் 2 பேரும் பலியானார்கள். வழக்கறிஞர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணும் உயிரிழந்தார்.
ஹத்ராஸ் வழக்கு:
உத்திரபிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14 ஆம் தேதியன்று நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உடல் முழுக்க காயங்களுடன் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் அலிகாரில் உள்ள ஜே என் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் முதுகெலும்பு மிகவும் பாதிக்கப்பட்டதால் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இப்பெண்ணின் மரணத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்புகள், பிரபலங்கள், நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் மற்றுமொரு கூட்டு பாலியல் பலாத்கார கொலை நடந்தேறியுள்ளது. உத்திரபிரதேசம் பாலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் கடந்த 29 ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை. மறுநாள் 30 ஆம் தேதி கையில் குளுக்கோஸ் ஊசியுடன் மிகவும் பலவீனமாக வீடு வந்து சேர்ந்துள்ளார்.
உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விசாரணையில் அந்த பெண் இரண்டு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. அதனை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காந்தி மகான் கண்ட புண்ணிய பூமி பலாத்கார பூமியானது:
பெண் குழந்தைகள் தொடங்கி வயதான முதிய பெண்கள் வரை கற்பழிக்கப்படும் அவல நிலையில் நாம் உள்ளோம். பார்க்கும் பெண்ணை எல்லாம் அடைந்து விட வேண்டும் அடங்க மறுத்தால் வீழ்த்தி விட வேண்டும் என்ற ஆணவம் தாயினால் பிறந்து சகோதரிகளுடன் வளரும் ஒரு ஆணுக்கு எங்கிருந்து வருகிறது?
குற்றம் புரியும் நால்வரில் ஒருவன் சற்று யோசித்து விலகினால் மற்ற மூவரையும் அவன் மாற்றி அந்த பெண்ணை காப்பாற்றிவிடலாமே, நம் எங்கே தவறி போனோம் தாயின் வளர்ப்பிலா? ஆசிரியர்களின் கற்பித்தலிலா? இல்லை சமூக சூழ்நிலையிலா?
பள்ளிக்கு செல்லும் மாணவிகள் வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் காட்சிப் பொருளாகவும் சதைப்பிண்டங்களாகவும் பார்க்கப்படுகின்றனர்.
இன்று நாம் கடந்து செல்லும் இந்த விஷயங்கள் அனைத்தும் ஒவ்வொரு துறையிலும் சாதிக்க காத்து கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளை பின்னுக்கு தள்ளி பண்டைய கால வழக்க முறைக்கு கொண்டு செல்ல அடித்தளம் போட்டு வருகிறது. ஆம்! இங்கு எதிர்த்து போராடினாலும் நியாயம் கிடைக்காது என்று நன்றாக தெரிந்து விட்டது தப்பு செய்யும் எவனும் மாறப்போவதுமில்லை இனி பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பிள்ளையின் பாதுகாப்பு என கூறி மீண்டும் குழந்தை திருமணம், கல்வி மறுப்பு எனத் தொடங்க வாய்ப்புள்ளது. பட்டாம்பூச்சிகளாக பறந்து கொண்டிருக்கும் பெண்களை அடுப்பங்கரையோடு அடைத்து வைப்பார்கள், இது தான் நம் சமூகத்தின் ஒரு சாரார் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது.
இந்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளுக்கு எதிராக முற்றுப்புள்ளிகள் வைக்கும் வரை சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி என்று தேசிய ஒருமைபாட்டைக் காட்டுவதிலும், ஆகாயத்தில் பறக்கும் கோள்களுக்கு ராக்கெட் விடுவதிலும், அரங்கம் ஏறி விருதுகள் வாங்கி சர்வதேச அளவில் உயர்வதிலும் ஒரு பயனும் இல்லை. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கரும்புள்ளி வைத்தாற் போன்று ஒரு நிர்பயாக்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.




