புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். சட்டசபையில் நாளை உரையாற்றவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில், முன் பட்ஜெட் மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை, துறைவாரியான நிதி ஒதுக்கீடு சமர்ப்பிப்பதற்கான ஒப்புதல் கோரும் உத்தேச திட்டம், நிதித் துறையிலிருந்து, ஜூலை 21ம் தேதி மாலை முதல்வர் வாயிலாக, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
நாளை காலை, 9:30 மணிக்கு சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுவதற்கான அழைப்பு கடிதம் முதல்வர், சபாநாயகர் ஆகியோரிடமிருந்து பெறப்பட்டது. சட்டசபையில் உரையாற்றுவதற்கான அழைப்பை ஆளுநர் ஏற்றுக்கொண்டுஉள்ளார்.
உள்துறை அமைச்சகம் வழங்கிய ஒப்புதலின் அடிப்படையில், சட்டசபையின் வருடாந்திர நிதி அறிக்கை மற்றும் மானியங்களுக்கான கோரிக்கை ஆகியவற்றுக்கான தன் பரிந்துரையை தெரிவித்துள்ளதோடு, நாளை உரையாற்றுவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.