ஊரடங்கினை மீறி கொடைக்கானல் வனப்பகுதிக்குள் சென்ற நடிகர்கள் விமல் மற்றும் சூரி மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு கோட்டாசியர் பரிந்துரை செய்துள்ளார்.

கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு பிறப்பித்த உத்தரவினை மீறி சென்ற வாரம் நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர் கொடைக்கானல் சென்று தங்கி வந்துள்ளனர். அதோடு அனுமதியின்றி வனப்பகுதிக்குள் சென்றதோடு, வனத்துறை காவலர்கள் உதவியுடன் தடைசெய்யப்பட்ட கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சென்று மீன் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
இதனையடுத்து விமல், சூரி ஆகிய இருவரும் ஊரடங்கினை மீறி கொடைக்கானல் வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்ததற்கு உதவி புரிந்த வனக்காவலர்கள் சைமன் பிரபு மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய வனத்துறை அதிகாரிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் தான் இதுக்குறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பிலிருந்து புகார் மனுக்கள் வந்துக்கொண்டிருந்த நிலையில் , இவ்விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கொடைக்கானல் கோட்டாசியர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சென்ற நடிகர்கள் சூரி, விமல் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை கண்காணிப்பாளருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக கோட்டாசியம் விளக்கம் தெரிவித்துள்ளார். மேலும் களவாணி தனமாக களவாணி பட நாயன் கொடைக்கானல் சென்று மாட்டிக்கொண்டார் என்பது போன்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது.