ஏர்வாடி தர்கா அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம், ஏர்வாடியில் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது. கடந்த 846 ஆண்டுகளாக இந்த தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் அனைத்து மதங்களையும் சார்ந்த யாத்ரீகர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறை கஞ்சிப்பள்ளி பகுதியில் உள்ள தோப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார்.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறும் போது ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறையிலுள்ள தோப்பில் 6½ அடி உயரம் 1½ அடி அகலம் உள்ள ஒரு கடற்கரைப் பாறையால் ஆன ஒரு தூண் உள்ளது. இதன் இரு பக்கமும் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு பக்கத்தில் தமிழ் கல்வெட்டும், மறுபக்கத்தில் பெரிய அளவிலான சில அரபி எழுத்துகளும் குடுவை போன்ற ஒரு குறியீடும் உள்ளன. அரபி எழுத்துக்கள் உள்ள தூணின் பின்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையிலுள்ளது. 20 வரிகள் கொண்ட தமிழ்க் கல்வெட்டில், பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால், இக்கல்வெட்டு பற்றிய முழுமையான தகவல்களை அறியமுடியவில்லை. எனினும் இதில் உள்ள நாயகத்து போன்ற மேலும் சில சொற்கள் மூலம், இக்கல்வெட்டு ஏர்வாடியிலுள்ள செய்யது இபுராகிம் பாதுஷா நாயகம் தர்காவுக்கு நிலதானம் வழங்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் அளவுகள் இதில் சொல்லப்பட்டுள்ளது. கீழ் மேல் கோல் முப்பத்தாறரை, தென் கீழை கல்லுக்கு மேற்குக்கு மேல் கோல் பதின்மூன்று, தென் வடல் கோல் அஞ்சு ஆகிய அளவுகள் கல்வெட்டில் உள்ளன. மற்ற அளவுகள் அழிந்துள்ளன. இதில் முப்பத்தாறரை, பதிமூன்று, அஞ்சு ஆகிய கோல் அளவுகள் சொல்லப்பட்டுள்ளன. மேலும் துல்லியமான அரைக்கோல் அளவும் இதில் கூறப்பட்டுள்ளது. எண்களை எழுத்தால் எழுதியுள்ளனர். எண் குறியீடுகள் பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக 1 கோல் என்பது 16 சாண் அளவுகள் ஆகும். பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சுந்தரபாண்டியன் கோல், வீரபாண்டியன் கோல் போன்ற கோல் அளவுகள் வழக்கில் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டில் நிலஅளவுகள் சொல்லும்போது இரு நபர்களின் பெயரில் உள்ள இரு கொத்துத் தெங்குகள் குறிப்பிடப்படுகின்றன. கொத்துத் தெங்கு என்பது தென்னந்தோப்பையும் குறிக்கிறது. தற்போதும் கேரளா மற்றும் இலங்கையில் தென்னையை தெங்கு என்றுதான் அழைக்கிறார்கள் என்பது கவனத்துக்குரியது. மன்னார் வளைகுடா கடற்கரைப் பகுதியான இங்கு பல நூற்றாண்டுகளாக தென்னந்தோப்புகள் இருந்து வருவதை இதன்மூலம் அறிய முடிகிறது.
கல்வெட்டில் நில அளவுகளின் எல்லை குறிப்பிடும்போது கீழைக் கல் என ஒரு சொல் வருகிறது. இது கடற்கரை வழியாக கீழக்கரை செல்லும் பாதையின் வழி காட்டும் கல்லாக இருக்கலாம். இக்கல்வெட்டின் எழுத்து அமைப்பைக் கொண்டு சுமார் 500 ஆண்டுகள் பழமையான கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்.