மதுரை மாவட்டத்தில் கி.பி 13 ஆம் நூற்றாண்டிலேயே சமணப்பள்ளிக்கு நன்கொடை அளித்துள்ள மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டினை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
மதுரை என்றாலே வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்த நகரம் என்று சொன்னால் அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்கேற்றால் போல் தற்போது மதுரை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் பல்வேறு தொன்மையான மற்றும் மன்னர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகில் உள்ள காரைக்கேனி ஊராட்சிக்குட்பட்ட செங்கமேடு கிராமத்தில் தான் தற்போது 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கல்வெட்டுகளின் சிறப்புகள் மற்றும் என்ன தான் கல்வெட்டில் உள்ளது? என்பது குறித்த ஆர்வத்துடன் தொல்லியல் ஆய்வாளர் மற்றும் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் முனீஸ்வரனின் கேட்டறிந்த போது, செங்கமேட்டில் தேவட்டி முனியாண்டி கோவில் அருகில் பாழடைந்த நிலையில் இருந்த பழமையான சத்திரம், கிணறு ஆகியவை இருந்ததை கண்டறிந்தோம். நிச்சயம் ஏதாவது தொல்லியல் பொக்கிஷங்கள் இருக்கும் என்ற ஆவலில் ஆய்வினை அங்கு தொடங்கினோம்.
அப்போது, அங்கு மகாவீரர் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இச்சிற்பம் 3¼ அடி உயரமும், 2¼ அடி அகலமும் கொண்டதாக காணப்பட்டது. மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தின் மேல் சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளதைப்போன்று காட்சியளித்தது. மேலும் அவரின் இருபுறமும் சாமரம் வீசும் இரு இயக்கர்கள் உள்ளனர். அவர் தலைக்கு மேல் முக்குடையும், பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டமும் உள்ளதாய் காணப்பட்டதாக விரிவாக எடுத்துரைத்தார்.
கிபி 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் அழிந்த கிராமம் தொல்லியல் ஆய்வில் மீட்டெடுப்பு
மேலும் இதில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் இருந்த கிரந்த எழுத்து தென்பட்டது. இதனை ஆராய்ந்த போது, செங்குடி நாட்டில் உள்ள திருஉண்ணாட்டூர் என்ற ஊர் கோவிலில் விளக்கு எரிக்கக் கொடுத்த கொடை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. இக்கோவிலின் பெயர் “அர்ஹா” எனத் தொடங்குகிறது. அதன் மீதிப்பகுதி சத்திரத்தில் உள்ள தூணின் அடிப்பகுதியில் மறைந்துள்ளது. சமஸ்கிருதத்தில் உள்ள இதனை அருகன் எனக் கொண்டால் இதை சமணப்பள்ளியாகக் கருதலாம். இதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 24வது சமணத் தீர்த்தங்கரரான மகாவீரரின் கருங்கல் சிற்பமும் இதை உறுதியாக்குகிறது.
இதனை வைத்து ஆராய்வு நடத்திய போது, இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டாகக் கருதலாம் என கூறிய அவர், கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு ஒரு சமணப்பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை அறிய முடிகிறது என தெரிவித்தார். மேலும் இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக இருந்திருக்கலாம்.
மேலும் கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருஉண்ணாட்டூர் என்னும் ஊர், இப்பகுதியில் இருந்து அழிந்துபோன ஊராக இருக்கலாம் எனவும் இங்கு இடைக்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகளும், செங்கற்களும் அதிகளவில் சிதறிக் கிடப்பதாகவும் கூறினார்.அதோடு சிறு சிறு துண்டுகளாய் சேதமடைந்த நிலையிலிருந்த தமிழ்க் கல்வெட்டுகளில் உள்ள சொற்களைக் கொண்டு, அவை கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு என்பதை அறியமுடிகிறது என தெளிவாக வரலாற்று ஆய்வுகளை எடுத்துரைத்தார்.