கொரோனா தொற்றால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடன்களை கட்டச்சொல்லி சில வங்கிகள், பொதுமக்களை நெருக்கடிக்குள்ளாக்கி வருகின்றன.

இதை மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்னதான் நடக்கிறது.
எல்லாருமே கடன்காரர்கள் தான்?
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. பொதுமக்கள் பொருளாதர ரீதியாக கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். மாநில அரசுகள், என்னதான் நிவாரணம் கொடுத்தாலும் அவை எல்லாம் யானை பசிக்கு சோளப் பொரிதான். எந்த வகையிலும் மக்கள் தன்னிறைவு பெற முடியவில்லை. 2020 மக்களின் வாழ்வு நிலையை பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியுள்ளது. 70 விழுக்காடு நடுத்தர வர்க்க மக்களை கொண்ட நம் நாட்டில் மக்களின் வாழ்க்கை தர வசதிகள் எல்லாமே வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை சார்ந்தே உள்ளது. கிட்டத்தட்ட 60 விழுக்காடு சாமானியர்கள் கடனாளியாகத்தான் இருக்கிறார்கள்.
கழுத்தை நெரிக்கும் வங்கிகள்
சுமூகமான சூழல் இருந்தவரை சாமானியர்களின் வாழ்க்கை வண்டியும் இயல்பாக உருண்டது. ஆனால் கொரோனா நோய் ஏற்படுத்திய அச்சுறுத்தல் இவர்களின் வாழ்க்கையை தேக்க நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. பொதுமக்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்த மத்திய அரசு ஒரு சலுகை அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி தனியார் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், வங்கிகள் கடன் தவணைகளை கட்ட சொல்லி வாடிக்கையாளர்களை 3 மாதங்களுக்கு நிர்பந்திக்க கூடாது.
இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். நாடு தழுவிய பொதுமுடக்கம் இன்னும் தொடர்வதால், வங்கி கடன்களை கட்டுவதற்கான சட்டப்பூர்வ கால அவகாசத்தை (Morotorium) மேலும் 3 மாதங்களுக்கு மத்தியஅரசு நீட்டித்தது. ஆனால் சில பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் கடன் தவணையை கட்டச் சொல்லி பொதுமக்களை நிர்பந்தித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

எடுத்துக்காட்டாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மாணுர்பாளையத்தை சேர்ந்த ராஜாமணி என்ற விவசாயி கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம், தாராபுரம் ஆக்சிஸ் வங்கி கிளை தான் எனக் கூறி விவசாயிகளும், அவரது உறவினர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர். ராஜாமணியின் வீட்டிற்கு தனியார் நிறுவனத்தை சேர்ந்த வசூல் ஏஜண்டுகள் சென்று அவரை மிக தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. ராஜாமணி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பலர் இது போன்ற அவமானங்களை சந்தித்து வருகின்றனர்.
கடந்த 18 மாதங்களில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 225புள்ளிகள் குறைத்துள்ளது, இந்திய ரிசர்வ் வங்கி. அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கொடுத்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் பொதுமுடக்க காலத்தில், கடன் தவணை கட்ட சட்டப்படியான கால அவகாசம் கிடைத்தும் வாடிக்கையாளர்கள் நெருக்கடிக்குள்ளாகி வருவதுதான் வேதனையான விசயம். தனிநபர் கடன், வாகனக்கடன், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடன் மட்டுமல்ல நீண்டகால கடனான வீட்டுக்கடன் பெற்றவர்களும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மகளிருக்கும் நெருக்கடி

இந்தியாவிலேயே மகளிர் சுய உதவிக்குழுக்கள் பொருளாதார ரீதியில் வெற்றிகரமாக செயல்படுவது தமிழகத்தில் தான். தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், தாங்கள் பெறும் கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தி வருகின்றனர். இந்த வெற்றிகரமான செயல்பாடுகளால், பல குறு நிதிநிறுவனங்கள் வங்கிகளாக தரம் உயர்ந்தன. மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பலரும், வீட்டு வேலை பார்ப்பது, வீட்டில் மாவு அரைத்து விற்பனை செய்வது, காய்கறி கடைகள் நடத்துவது, தையல் கடை நடத்துவது போன்ற சாதாரண வேலை செய்பவர்கள் தான். கொரோனா நோய் தொற்றால் கடந்த ஐந்து மாதங்களாக முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடியும் உண்டானது. ஆனால் மைக்ரோ நிதி நிறுவனங்கள், கடன் தவணையை கட்டச்சொல்லி சுய உதவிக்குழுக்களுக்கு நெருக்கடியை கொடுத்துத்தான் வருகின்றன. அதிலும் சிலர் அதிகாலை ஐந்து மணிக்கே வீட்டுக்கதவை தட்டி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடன் தொகை கட்டுவதற்கான கால அவகாசம், தலா 3 மாதங்கள் என இரண்டு முறையாக மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை தவணைககளை கட்டத்தேவை இல்லை. ஆனாலும் வாடிக்கையாளர்கள் கடுமையான நெருக்கடிக்கும், அவமானத்திற்கும் ஆளாகி வருகிறார்கள். வரும் 31 ஆம் தேதியோடு சட்டப்படியான பாதுகாப்பும் முடியப் போகிறது. மத்திய அரசின் அறிவித்துள்ள கால அவகாம் முடிவதற்குள்ளாகவே கடுமையான நெருக்கடிகளை கொடுக்கும் நிதி நிறுவனக்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகு என்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ என கலக்கத்தில் உள்ளனர் மிஸ்டர் பொதுஜனம்.
என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?
முழுமையான தளர்வுகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. வேலை வெட்டிக்கு போய் கையில் நாலு காசு பார்க்கும் சூழ்நிலையும் இன்னும் வரவில்லை. இயல்பு நிலை திரும்பவே இன்னும் 4 அல்லது 5 மாதங்கள் ஆகலாம். அதுவரை மேலும் கால அவகாச நீட்டிப்பு வழங்குவது தான் உண்மையான தீர்வு.
ஆனால் HDFC வங்கியின் தலைவர் தீபக் பரேக் கடன் இ எம் ஐ சலுகையை மேலும் நீட்டிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாசிடம் வலியுறுத்தியுள்ளார். ரிசர்வ் வங்கி யாருடைய வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் என்று தெரியவில்லை. பல ஆயிரம் கோடி கடன் கொடுத்த பெருமுதலாளிகளிடம் கடன் தொகையை வசூலிக்க முடியாமல் கை கட்டி,வாய் பொத்தி நிற்கும் வங்கிகள் சாமானியர்களுக்கு வாள் வீசுவதுதான் வேடிக்கையின் உச்சம். சாது தான் ….மிரண்டால் காடு கொள்ளாது….
சுரா-