கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பெண்மணி, மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சாமி ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டம் ஹொனாலி தாலுகாவில், ஜக்கம்மா என்ற பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால், ஆம்புலன்ஸில் ஏற மறுத்த ஜக்கம்மா, திடீரென்று சாமியாட தொடங்கிவிட்டார். சாமியாடியதோடு மட்டுமல்லாமல், ‟யாரும் பயப்பட வேண்டாம், அனைத்தும் சரியாகிவிடும்” என ஜக்கம்மா அங்குள்ள அனைவருக்கும் அருள்வாக்கும் சொல்லத் தொடங்கி விட்டார்.
இதனையடுத்து, அதிகாரிகள் அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, வர மறுத்து முறண்டு பிடித்து, தொடர்ந்து சாமியாடிய வண்ணம் இருந்துள்ளார். இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் என அனைவரும், ஜக்கம்மா சாமியாடி முடிக்கும் வரை காத்திருந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.




