தி.மு.க.வில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறிவிட்டது என்றும், தைரியம் இருந்தால் என்னை கட்சியில் இருந்து நீக்குங்கள் என்றும் கமலாலயத்தில் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வின் தலைமை கழக நிர்வாகியும், ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ.வுமான கு.க.செல்வம், நேற்று டெல்லியில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவையும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்தார். ஆனால், தான் பா.ஜ.க.வில் சேரவில்லை என்றும், மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் உடனான உறவை துண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கு.க.செல்வத்தின் இந்த செயல்பாடு கட்சித் தலைமை மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கு.க.செல்வத்தை கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாகவும், கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கப்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
இதையடுத்து, சென்னை, தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு கு.க.செல்வம் நேரில் சென்றார். அங்கு அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கு.க.செல்வம் கூறியதாவது,
தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள என்னை, முழுவதுமாக தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் கவலை இல்லை. தி.மு.க.வில் இருந்து தைரியம் இருந்தால் என்னை நீக்குங்கள். தி.மு.க.வில் வாரிசு அரசியல் மாறி, குடும்ப அரசியலாக மாறிவிட்டது. தி.மு.க.வில் இப்போது உதயநிதி சொல்வதை கேட்கும் நிலை உள்ளது. தி.மு.க.வில் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்சியில் இருக்காதீர்கள். எனக்கு ஏற்பட்ட நிலை அனைவருக்கும் ஏற்படலாம். அதனால் எல்லோரும் பா.ஜ.க.வில் வந்து சேருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். ஆனால், அவர் பா.ஜ.க.வில் இணையவில்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.




