முகநூலில் பிரபலமான எனக்கும் பசிக்கும்ல என்ற இணைய பக்கத்தில், சாந்தி பாஸ்கர் என்பவர் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் விதவிதமாக சமைத்து அசத்தியுள்ளார்.
நம்முடைய பிறந்த நாளை விட நமக்கு பிடித்தமானவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடங்கியிருக்கும். பிடித்தமானவர்களை அந்த நாளில் மகிழ்விப்பதே ஒரு அலாதியான சுகம்தான்.
நண்பர்களின் பிறந்த நாளில் அவர்களை ஆச்சரியப்படுத்துவது வேடிக்கையும், கலகலப்பும் கலந்து இருக்கும் என்றால், வாழ்க்கைத்துணையின் பிறந்த நாளில் அவர்களை ஆச்சரியப்படுத்துவது காதலும், மகிழ்ச்சியும் கலந்து இருக்கும்.
அப்படி, ஒரு மனைவி தனது கணவரின் பிறந்தநாளான நேற்று அவரை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
லாக்டவுன் காலம் பல செஃப்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் முகநூலில் பிரபலமான, “எனக்கும் பசிக்கும்ல” என்ற இணைய பக்கத்தில், சாந்தி பாஸ்கர் என்பவர் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் விதவிதமாக சமைத்து அசத்தியுள்ளார்.
தனது கணவரின் 55வது பிறந்தநாளை நினைவுப்படுத்தும் விதமாக, 55 வகையான உணவுகளை சமைத்து பரிமாறியுள்ளார். மனைவியின் சமையலை ருசி பார்க்க அமர்ந்திருக்கும் கணவர் முன் பரிமாறப்பட்ட உணவு வகைகளை புகைப்படமாக எடுத்து பகிர்ந்துள்ளார்.
ஹோட்டல் மெனுக்களை கூலாக வீட்டில் செய்த சாந்தியை தொடர்பு கொண்டோம். ” நெல்லை தான் சொந்த ஊரு. நான் ஆசிரியையாக வேலை செய்கிறேன். கணவர் பாஸ்கர் வங்கியில் பணி புரிகிறார். மகள் ஹாஸ்டலில் தங்கி படித்தார். ஆளுக்கொரு இடத்தில் இருந்ததால், எல்லாரும் எந்த விசேஷ நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ள முடியாது. வீட்டில் ஒன்றாக இருப்பதே பெரிய விசயமாக இருக்கும். சமீபத்தில் தான் எங்கள் மகள் கீர்த்தியின் திருமணம் முடிந்தது. அவளது திருமணத்திற்கு பிறகு வரும் என்னுடைய கணவரின் முதல் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட முடிவு செய்தேன். ஆனால் லாக்டவுன் காரணமாக வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. கூட்டு குடும்பம் என்பதாலும், பிடித்தமான வேலை என்பதாலும் சமையலில் அதிக நேரம் செலவிடுவேன். அதனால் அவருக்கு பிடித்த விதவிதமான சமையல் செய்ய முடிவெடுத்தேன். பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பே 55 வகையான உணவு லிஸ்ட்டை தயாரித்தேன். ஒவ்வெரு மெனுவாக தயாரித்து முடிக்க முடிக்க எனது மகள் லிஸ்டை டிக் செய்து வந்தாள். பாதி நாளில் அனைத்தும் முடித்து பந்தி பரிமாறும் போது, என்னவர் மீது இருந்த காதலால், வேலை பெரிதாக தெரியவில்லை” என சொல்லி சிரிக்கிறார்”, இந்த டீச்சரம்மா.
“அம்மா ரொம்ப ஆர்வமாக சமைச்சாங்க. என்னை அவங்களுக்கு உதவி செய்ய கூட விடலை. திருமணமாகி செனனையில் செட்டில் ஆகிட்டேன். இப்போது லாக்டவுன் காரணமாக ஊருக்கு வந்திருக்கேன். அப்பா பிறந்தநாளை அம்மா கொண்டாட முடிவு பண்ணதை முதலில் பெரிசாக எடுத்துக்கலை. தனி ஆளாக எப்படி இவ்வளவு சமைக்க முடியும் என்ற கேள்வி தான் இருந்தது. ஆனால் மின்னல் வேகத்தில் சமைத்து அம்மா எடுத்து வைத்ததை பார்த்து பிரமித்து தான் போனேன். எனது கணவருடன் அப்பா பிறந்தநாளை இப்படி வித்தியாசமாக சமைத்தது, செம ஜாலியாக இருந்தது என்கிறார்”, கீர்த்தி
“இப்படி ஒரு பிறந்தநாளை இதுவரை கொண்டாடியதில்லை. சமையல் செய்து அன்பு மழையில் திக்கு முக்காட செய்து விட்டார் அன்பு மனைவி சாந்தி. மனைவிக்கு காதலுடன் நன்றியை தெரிவித்துள்ளார்”பாஸ்கர்.
எனக்கும் பசிக்கும்ல குழுவில் உள்ளவர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.”இந்த அக்கா மாதிரி இல்லை என்றாலும் ஐந்து வகைகளை சமைக்க தெரிந்த பெண்ணை காட்டுமாறும், என்னென்ன செய்தீர்கள் என எழுதவே கை வலிக்கும் போல” எனவும் கமெண்ட்டுகளை பறக்க விட்டுள்ளனர்.