உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுவுக்கு உண்டு. கொள்ளுவில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
“கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு”, பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. “ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது” என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன. இன்று கொள்ளுவில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு – கால் கப்
- புளி – நெல்லியளவு
- தக்காளி – 2
- மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 3
- பூண்டு – 6
- கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- மஞ்சள் தூள், கடுகு – கால் டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கு.
செய்முறை
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை கரைத்துக் கொள்ளவும்.
கொள்ளுவை கல் இல்லாமல் சுத்தம் செய்து, முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் (1/4 கப்பிற்கு 2 டம்ப்ள்ர் தண்ணீர்) 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும், கொள்ளை மிக்சியில் தனியே அரைத்தெடுக்கவும்.பின்பு மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
சுவையான கொள்ளு ரசம் தயார்.