நீதிபதிகள் நியமனம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி நடந்த துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சியில், ஆடிட்டர் குருமூர்த்தி, நீதிபதிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். உச்ச நீதிமன்றம் லஞ்சத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு கருணை காட்டும்போது எப்படி லஞ்சம், ஊழல் இந்த நாட்டில் ஒழியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
காரணம் என்னவென்றால், இப்போது உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள். யாருடனோ யார் மூலமோ போய் யார் காலையாவது பிடித்துதான் நீதிபதிகள் பல பேர் வந்திருக்கிறார்கள்.தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இதுமாதிரி ஒரு நிலைமை இருக்காது என்று குருமூர்த்தி பேசிவிட அது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி, நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்போர் என்று கூறுவதற்கு பதிலாக நீதிபதிகள் என கூறிவிட்டேன் என்றும்; நீதித்துறை மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். குருமூர்த்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. குருமூர்த்திக்கு எதிராக காவல் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது.
read more: சசிகலா குடும்பத்தினரிடம் ஏராளமான பணம் உள்ளது: ஜெயக்குமார்
இந்த நிலையில் நீதிபதிகள் நியமனம் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதித்துறையை களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையீடு செய்தார். இதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு அவருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கினர்.




