2021-ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டிற்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றால் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் கூட்டம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது.இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், இந்த ஆண்டு போட்டிகள் நடத்த முடியாதக் காரணத்தால், 2021- ஆம் ஆண்டு நடக்கவுள்ள தொடரை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு தர வேண்டுமென்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியது.ஆனால், ஏற்கனவே 2021-ஆம் ஆண்டு தொடரை நடத்துவதற்கான உரிமத்தை இந்தியா பெற்றுள்ளக் காரணத்தால், இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
மேலும், 2023-ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடத்தப்பட இருப்பதால், தொடர்ந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்புத் தெரிவித்துவிட்டது.
எனவே, இந்தக் கூட்டத்தின் முடிவில் 2021-ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறும் என்றும், தள்ளிவைக்கப்பட்ட 20 ஓவர் உலக கோப்பை போட்டியை 2022-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.