உலகில் முதன் முதலில் விமானத்தை பயன்படுத்தியதும், அதை இயக்கியதும் ராவணன் தான் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. விரைவில் இதை நிருபிக்க உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது தான் ஆச்சர்யம்.

முதல் முதலில் விமானத்தை கண்டுபிடித்தது ரைட்ஸ் சகோதரர்கள் தான் என உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அட போங்க பாஸ் அதெல்லாம் கப்சா…. முதல் முதலில் விமானத்தை கண்டுபிடித்ததே எங்கள் நாட்டை ஆண்ட ராவணன் தான் என இலங்கை அரசு திடமாக நம்புகிறது. இதை நிருபிக்கும் முயற்சியிலும் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளாது. இதற்காக இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்கள் இருந்தால் அரசிடம் கொடுக்க வேண்டும் என்றும் அந்நாட்டு சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மன்னனான இராவணன் குறித்தும், அந்நாட்டின் விமான போக்குவரத்து வரலாறு குறித்தும், உலகின் முதல் விமான போக்குவரத்து குறித்தும் விரிவான ஆராய்ச்சி நடத்த இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
5000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக நம்பப்படும் ராமாயணத்தில் இலங்கை வேந்தன் ராவணன் புஷ்பக விமானத்தை பயன்படுத்தியதாக குறிப்பு உள்ளது.
எனவே ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை மன்னன் விமானத்தை பயன்படுத்தியுள்ளதாகவும், இதுவே முதல் வான்வழி போக்குவரத்து என்றும் இலங்கை அரசு திடமாக நம்புகிறது. இதை மெய்பிக்கும் முயற்சியாக இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் பிற வரலாற்று தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது இலங்கை அரசு.
விமானத்தைப் பறக்கவிட்ட முதலாவது ஆள் இராவணன் என்பதை நிரூபிக்க அரசாங்கத்திற்கு மறுக்கமுடியாத ஆதாரங்கள் உள்ளது என்றும் அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது ஐதீக கதை அல்ல, இது ஒரு உண்மை என்றும் இது குறித்து விரிவான ஆராய்ச்சி இருக்க வேண்டும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை தாங்கள் நிரூபிப்போம் என்றும் இலங்கை அறிவித்துள்ளது.
எனவே இந்த முயற்சிக்கு பங்களிக்க விரும்பும் பொதுமக்கள் இராவணன் குறித்த ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்கள் தங்களிடம் இருந்தால் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி mgrrdp@caa.lk என்ற மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது. இதே போல் 076-6317110 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் இலங்கை விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது உண்மை என நிருபிக்கப்பட்டால் வரலாறு திருத்தி எழுதப்படும். என்ன நடக்கிறது நாமும் ஆவலோடு காத்திருப்போம்..
சுரா-