வடிவேல் ஒரு படத்தில் ஐயோ ஐயோ கிணற்றை காணோம் கிணற்றை காணோம் என்று கூறுவார். தற்போது அதே மாதிரி ஒரு சம்பவம் கன்னன்குளம் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் , இராதாபுரம் தாலுகா கும்பிகுளம் அருகில் உள்ள கன்னன்குளம் கிராமத்தில் விவசாயத்திற்கு பயன்படும் குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் இருந்து பல ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றது. தற்போது அந்த குளத்தின் கரையை சில சமூக விரோதிகள் பாழ்படுத்தி உள்ளார்கள். இதைபற்றி சீலாத்திகுளம் கிராமநிர்வாக அலுவலரிடம் பலமுறை ஊர்மக்கள் புகார் கூறியும், எந்தவித முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர் முறைகேடு செய்யும் நபரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக அனைத்தையும் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் இந்த குளத்தில் இருந்து பாசன வசதி பெரும் விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
ஒரு தனி நபர் குளத்தின் கரையை சுமார் ஒன்றறைகிலோ மீட்டர் அளவுக்கு சேதப்படுத்தியும் கற்களை கொண்டு நிரப்பியும் குளத்தின் உறுதி தன்மை கேள்வி குறி ஆக்கி கொண்டு இருக்கிறார்கள். தற்போது பருவமழை பொழிந்து வருவது தொடங்கி விட்டது. இதனால் குளம் உடையும் ஆபத்து இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு குளம் நிரம்புவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஊர்மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்போம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.