தமிழகத்தில் கொரோனா காலத்தில்கூட 41 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் ரூபாய் 30,500 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, நெருக்கடி காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வரும் 31-ந் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது முடிவுக்கு கொண்டு வரலாமா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கத்தை கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்தப்படுகிறது. வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து பி.சி.ஆர். சோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளிப்பது போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நமது மாநிலத்தில் தான் அரசின் சார்பாக 58, தனியார் சார்பாக 61 பரிசோதனை நிலையங்கள் என மிக அதிகமான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 24.7 லட்சம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 63,000 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தனியார் மையங்களிலும் பரிசோதனை செய்யப்படுகின்றது. இதற்கான கட்டணத்தை அரசே நிர்ணயித்துள்ளது. தற்போது மாநில அளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து 54,091 படுக்கைகளும், கோவிட் சிறப்பு மையங்களில் 64,903 படுக்கைகளும் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 25,538 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.
ஐ.சி.யூ. வசதி கொண்ட (தனியார், அரசு இரண்டும் இணைந்து) 3,962 படுக்கைகளும், 2,882 வென்டிலேட்டர்களும் பிரத்யேகமாக கோவிட் தொற்று சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக 15,000 மருத்துவப் பணியாளர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 2,751 மருத்துவர்களும், 6,893 செவிலியர்களும் உள்ளடங்கியுள்ளனர். மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன
மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், என்-95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், மும்மடி முகக்கவசம் ஆகியவற்றை தேவையான அளவு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. நாட்டிலேயே மிகக் குறைவான, அதாவது 1.6 சதவீதம் உயிரிழப்பு மற்றும் சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் 73 சதவீதத்திற்கு மேல் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் மற்றும் அரசு காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் வேண்டுமெனில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணங்களையும் பொதுமக்கள் நலன் கருதி அரசு நிர்ணயம் செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டதில் பலர் பூரண குணமடைந்ததைக் கருத்தில் கொண்டு, அதனை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
4,18,903 வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்திருக்கின்றோம். மேலும், 51,711 வெளிநாடு வாழ் தமிழர்களையும், வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் மக்களுக்கு இலவச முகக்கவசங்கள், ஆகஸ்டு 5-ம் தேதி முதல் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும். இதுவரை 46 லட்சம் முகக்கவசங்கள் சென்னையிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.