விவசாயம், திருமணம், தொழில் போன்ற பலவற்றில் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆடிப்பெருக்கு இந்தாண்டு வழிபாடுகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நாளில் அதன் சிறப்பினை பற்றி தெரிந்து கொள்வோம்.

“ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள்” அது விவசாயத்திற்கு மட்டுமில்லை வாழ்வில் எந்த தொழிலை தொடங்க வேண்டும் என்றாலும் ஆடி மாதம் 18 ஆம் தேதி அதாவது ஆடிப்பெருக்கு அன்று மேற்கொண்டால் வளம் சொழிக்கும் என்பது தான் ஐதீகம். மேலும் வற்றாத ஜூவ நதிகள் நம்மை காத்துவருவதாக கருதி அவற்றிற்கும் பூஜைகள் செய்து வழிபடுவது தான் இந்த ஆடிப்பெருக்கின் முக்கிய நோக்கமாகும்.
ஆடிப்பெருக்கு உழவர்களுக்கான நாள்
“ஆடிப்பட்டம் தேடி செந்நெல் விதைப்போட்டு கோடிச்செல்வம் ஆடச்சம்பா பயிராச்சு” இந்த வரியிலேயே இந்நாள் பெருமை மற்றும் உழவர்களின் நம்பிக்கை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதற்கேற்றால் போல் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இதில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் உழவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்யமுடியும். எனவே இந்நாளில் வற்றாத ஜூவ நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்வார்கள். தைமாதம் தான் உழவர் தினம் நாம் கொண்டாடுவோம் ஆனால் மண்ணிற்கும், நதிகளுக்கும் செய்யும் தொழிலுக்கும் நன்றியை தெரிவிக்கும் நாளாக இந்த ஆடி 18 (ஆடிப்பெருக்கு) ஒவ்வொரு ஆண்டும் பார்க்கப்படுகிறது.
காலநிலையும் ஆடிப்பட்டமும்
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கென்று ஒரு சிறப்பு உள்ளது. இந்த மாதத்தின் 18 ஆம் தேதி ஆடிப்பட்டம் என்பார்கள். இதில் பட்டம் என்பது காலநிலையை குறிக்கும். இதற்கு முந்தைய மாதங்கள் அதாவது சித்திரை, வைகாசி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் அதனால் எந்த பயிரினையும் பயிர முடியாது. ஆனால் இந்த ஆடி மாதத்தில் சூரிய கதிர்களின் வெப்பம் குறைவாக இருப்பதோடு, தென்மேற்கு பருவமழையால் அடிக்கடி சாரல்மழையும் பெய்யக்கூடும். இதன் காரணமாக மானாவரி விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக அமையும். மேலும் ஆடியில் காத்தடித்து ஐப்பசியில் மழை பெய்யும் என்பதால் இதனையடுத்து வரும் மாதங்களில் நல்ல காலநிலை நிலவும் என்பதே இதன் முக்கியத்துவமாகும். மேலும் ஒவ்வொரு கிராமப்புற மக்களும் விவசாய பணிகளை மேற்கொள்வதோடு வீடுகளிலும் தோட்டப்பயிர்களை பயிரிடுவதும் இந்நாளின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
ஆடிப்பெருக்கில் நதிகளில் வழிபாடு

ஆடிப்பெருக்கில் வைகை, பவானி கூடுதுறை ஆற்றங்கரைகளில் வழிபாடு நடத்தி புதுமண தம்பதிகள் தாலிச்சரடு மாற்றிக்கொள்வார்கள், மேலும் குல தெய்வ வழிபாடும் மேற்கொள்வார்கள். மேலும் குறிப்பாக இந்நாளில் காவிரித்தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்திற்கு தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது தான் ஐதீகம். எனவே இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியுடன் வரவேற்க மக்கள் தயாராக இருப்பார்கள்.

இன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் சிறப்புடன் அமையும். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்றினால் வீட்டினை விட்டு யாரும் வெளியே போக முடியாத நிலையால், வீட்டில் வழிபாடுகளை மக்கள் செய்துவருகின்றனர்.