அமெரிக்கா தங்களது நாட்டை கொடுமைப்படுத்துவதாக சீனா குற்றம்சாட்டி உள்ளது.
உலகின் இருபெரும் பொருளாதார வல்லரசு நாடுகளாக திகழும் அமெரிக்கா – சீனா இடையேயான முட்டல், மோதல்கள் பல காலங்களாக நீடித்து வருகிறது.
கொரோனா பரவலை அடுத்து தொடர்ந்து இந்த மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில், தென்சீனக் கடலில் சீன ஆதிக்கம், தைவானில் தலையீடு, ஹாங்காங்கில் புதிய பாதுகாப்பு சட்டம், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், சீனாவை பூர்வீகமாக கொண்ட டிக் டாக் செயலியை பயன்படுத்தி சீன அரசு தங்கள் நாட்டு மக்களின் தரவுகளை திருடுவதாக அமெரிக்க குற்றம்சாட்டி உள்ளது. இதையடுத்து, வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் அல்லது அமெரிக்காவில் அந்த செயலி தடை செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், அமெரிக்கா சீனாவை கொடுமைப்படுத்துகிறது. சீனாவின் டிக் டாக்கை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க ட்ரம்ப் நிர்பந்திப்பது, உலக வர்த்தக அமைப்பின் வெளிப்படைத்தன்மைக்கும், அதன் சட்ட திட்டங்களுக்கும் எதிரானது என தெரிவித்து உள்ளார். மேலும், எந்த ஆதாரமும் இல்லாமல் தேசிய நலன்களை பாதுகாப்பதாக கூறி அமெரிக்கா அல்லாத நிறுவனங்களை நியாயமற்ற முறையில் முடக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அமெரிக்க பாதுகாப்பிற்கு சீன நிறுவனங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுவதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. தகுதியும் இல்லை என்று அவர் கூறினார். இந்த நிறுவனங்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் அமெரிக்க சட்டங்களை பின்பற்றியே தங்கள் வணிக நடவடிக்கைகளை செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.