அமெரிக்காவில் ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பாதுகாப்புப் படையினர் கார் பார்க்கிங் பகுதிகளில் உறங்கிய காட்சி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் :
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இதையடுத்து கடந்த ஜனவரி 20 ம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவி ஏற்று அசத்தினார். அவரை தொடர்ந்து இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி ஏற்றார்.
இந்தநிலையில், ஜோ பைடன் பதவி ஏற்பதை எதிர்த்து ஏற்கனவே கேபிட்டல் கட்டடத்தில் அப்போதைய அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜோ பைடன் பதவியேற்பை ஒட்டி ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடக்கலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தநிலையில், 25 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Read more – குடியரசு தினவிழா அணிவகுப்பு : முதல் முறையாக பங்கேற்கும் வங்காளதேச படைகள்
ஜோ பைடன் பதவி ஏற்புக்கு பிறகு, பாதுகாப்புப் படையினர் சிலர் கேப்பிட்டல் கட்டடத்துக்கு அருகில் உள்ள அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங் பகுதியில் படுத்து உறங்கும் காட்சி இணையத்தில் பரவியது. இதையடுத்து பல அரசியல் கட்சி தலைவர்கள் முதல் மாநில ஆளுநர்கள் வரை விமர்சனம் செய்தனர்.
இதையறிந்த அமெரிக்க அதிபர் பைடன் பாதுகாப்பு படையினரின் தலைவரை அழைத்து மன்னிப்பு கேட்டு மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் என்றும் கேட்டு தெரிந்துகொண்டார். இந்தநிலையில், ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் படையினர் சிலரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து பிஸ்கட் போன்றவற்றை வழங்கினார்.