வைரஸ் பரவலை தடுக்கும் என்ற பெயரில் வெளியான ஜப்பானின், “வைரஸ் ஷட் அவுட்” அட்டை, பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஆட்கொல்லியான கொரோனா வைரசின் பிடியில் இருந்து தப்பிக்க மனித இனம் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் போன்றவை வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.அந்த வகையில் வைரஸ் ஷட் அவுட்” என்ற பெயரில் ஜப்பான் நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்திய ஒரு வைரஸ் தடுப்பு அட்டையை அணிவதன் மூலம், 1 மீட்டர் சுற்றளவுக்கு வைரஸ் கிருமிகள் மூச்சுக்காற்றில் பரவுவதை கட்டுப்படுத்தும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தடுப்பு அட்டையில் இருக்கும் துவாரங்களின் மேலுள்ள உரையை துளையிட்டு, கழுத்தில் அடையாள அட்டை போல மாட்டிக் கொண்டால் போதும். இந்த அட்டைக்குள் பவுடர் போல நிரப்பப்பட்டுள்ள குளோரின் டை ஆக்ஸைடு காற்றில் பரவி கிருமிகளை தடுக்கும் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள். சமீபத்தில், தமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவும் இந்த அட்டையை அணிந்து, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றத்தை காண முடிந்தது.

இந்நிலையில், 120 ரூபாயை அடிப்படையாக விலையாக கொண்ட இந்த அட்டைக்கு பல போலிகளும் வரத்தொடங்கியுள்ள நிலையில், இந்த அட்டை மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்பது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை எனவும், அரசு அனுமதியற்ற இந்த அட்டையால் பல பக்க விளைவுகள் வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எஸ்.ஜி.பி.ஜி.ஐ.யின் நுண்ணுயிரியல் துறையின் தலைவர் டாக்டர் டி.என். தோலே இதுகுறித்து பேசுகையில், வைரஸ் ஷட்-அவுட் அட்டை “முற்றிலும் போலியானது” எனவும், இந்த அட்டை அணிவதன் மூலம் கண்களில் நீர் வழிதல், தோல் எரிச்சல் மற்றும் இருமல் போன்ற மனித உடலில் மோசமான விளைவுகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருமல் அல்லது மூச்சு விடும்போது கொரோனா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் நிலையில், இந்த அட்டை எவ்வாறு அதனை தடுக்கும் என்று எதிர்பார்க்கலாம் என கேள்வி எழுப்பும் தோலே, ஈரப்பதமான காலநிலையில் வைரஸை எதுவும் தடுக்க முடியாது என்றும் மாஸ்குகளுக்கு மாற்றாக தற்போது வரை எதுவும் இல்லை என விளக்குகிறார்.

இதனிடையே, வைரஸை ஆரம்ப கட்டத்திலேயே அழிப்பதாக உறுதியளிக்கும் தயாரிப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, ஐ.எம்.ஏ பிரிவிற்கான லக்னோவின் தலைவர் டாக்டர் ராம ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.
மேலும், இந்த அட்டைகள் பயனாளர்கள் நகரும்போது காற்றில் இருந்து கிருமியை நீக்குவதாக கூறப்படும் நிலையில், காற்று வேகமாக, குறிப்பாக வெளிப்புறங்களில், காற்று நகரும் இடத்தில் இந்த சாதனங்கள் எந்த பாதுகாப்பையும் அளிக்காது என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுதொடர்பாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜப்பானிய நுகர்வோர் விவகார நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிராக ஷட்-அவுட் அட்டை பயனற்றது என குறிப்பிட்டுள்ளது. ஆனால், இன்னமும் கூட உள்ளூர் நிறுவனங்கள் கொரோனா பரவலை தடுக்க உதவும் அட்டை என்கிற பெயரில் இதனை விற்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்.




