அமெரிக்காவின், கலிபோர்னியாவில் பரவியுள்ள காட்டுத் தீயால், 20 ஆயிரம் ஏக்கர் வனம் எரிந்து நாசம் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி என்ற வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் திடீரெனக் காட்டுத் தீ ஏற்பட்டது. ஒரு சில மணி நேரங்களில் மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
முதலில், சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், 1,300 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை கொண்டு காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனாலும், தொடர்ந்து தீ பரவியதால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கத் தொடங்கியது.
இந்த காட்டுத்தீ-க்கு ஆப்பிள் பயர் என பெயரிட்ட அதிகாரிகள், வனப்பகுதியை யொட்டி 2500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்த 8 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில், ஏராளமான தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தியும் கட்டுக்கடங்காத காட்டுத் தீ, 20,000 ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிறிய ரக விமானங்களை பயன்படுத்தி, ரசாயனப் பொடியைத் தூவி தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரசாயனப் பொடியை தூவும் பணியில் ஏராளமான சிறிய ரக விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படும் நிலையில், ஒரு சதவீதம் கூட காட்டுத் தீயை கட்டுப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இருப்பினும், தீயை அணைக்க கடும் முயற்சிகளை செய்து வருவதாக கூறும் அதிகாரிகள், மனித உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஏராளமான வன விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.