இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள், என்ற ஆயுஷ் அமைச்சக செயலரின் பேச்சுக்கு, கனிமொழி, கமல், வைரமுத்து உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, நாடு முழுவதும் உள்ள யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான மூன்று நாள் ஆன்லைன் கருத்தரங்கம், மத்திய ஆயுஷ் மருத்துவ அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 37 பேர், உட்பட நாடு முழுவதும் 350-கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் நடைபெற்ற வகுப்புகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர், ராஜேஷ் கொட்டேச்சாவும் இந்தியிலேயே பேசியுள்ளார். இதனால் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவர், ‟இந்தி தெரியவில்லை என்றால் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள்.என்னால் ஆங்கிலத்தில் பேச முடியாது, எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது” என கடுமையாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் எனக் கூறிய ராஜேஷ் கொட்டேச்சாவின் கருத்துக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‟மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இதுக்குறித்து, மத்திய அரசு உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கபடுவதை பொறுத்துக்கொள்ளப் போகிறோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதைப்போல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள், தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்றக் கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித்திருநாடு” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா, அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்றக் கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.




